• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி..,

ByKalamegam Viswanathan

Feb 11, 2026

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுமார் 155 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வந்தனர்.

சின்ன உடைப்பு கிராம மக்கள், தற்போது தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்திக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று மதுரையில் நடைபெற்ற மக்கள் கருத்து குறிப்பு கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களிடம் மனு அளிக்கச் சென்றபோது, அமைச்சர் மூர்த்தி தங்களை ஒருமையில் பேசி அவமதித்ததாகவும், சாதி வன்மத்துடன் நடந்து கொண்டதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகச் சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள வீடுகளைக் காலி செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது, கடந்த சில வாரங்களாகவே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.65 பேருக்கு மட்டும் இடம் அரசு ஒதுக்கீடு செய்ததை ஏற்காமல் மொத்தமுள்ள 250 பேருக்கு வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

தங்களுக்கு மாற்று இடம் மற்றும் கூடுதல் இழப்பீடு வழங்காமல் வெளியேற மாட்டோம் என உறுதியாகக் கூறி வரும் நிலையில், நேற்றைய கூட்டத்தில் எம்பி கனிமொழியிடம் முறையிடச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி, “இந்தக் கிராமத்தையே நான் தான் காப்பாற்றினேன்” என்று கூறியதாகவும், தங்களை மிகவும் ஒருமையில் பேசி, சாதி ரீதியிலான வன்மத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் அமைச்சரை கண்டித்து, இன்று சின்ன உடைப்பு கிராமத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமைச்சரின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனர் அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மூர்த்திக்கு எதிரான இந்தத் திடீர் போராட்டமும், உருவப்பொம்மை எரிகக்க முயன்ற சம்பவமும் மதுரையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போராட்டக் குழுவில் உள்ள தேவேந்திர குலம் மகாசபை தலைவர் ஜெயக்குமார் கூறுகையில் எங்கள் சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களின் உரிமைக்காக வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு ஈடு செய்யும் வகையில் 65 பேருக்கு மட்டும் இடம் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்து 250 பேருக்கும் இடம் வழங்கக்கோரி போராடி வருகிறோம் இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி விரும்பத்தகாத வகையில் ஜாதியை வன்மத்துடன் பேசியது கண்டிக்கத்தக்கது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலையிட்டு உடனடியாக அமைச்சர் மூர்த்திக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.