நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களின் முதல் பட்டதாரியும், முதல் சட்டமன்ற உறுப்பினருமான ஆரிய கவுடர் 129வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. .நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மலை ரயில் தண்டவாள பாதையினை அமைத்த ஒப்பந்ததாரரும், கல்வியின் அருமை உணர்ந்து உபதலை கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு இலவச பள்ளியை தொடங்கியவரும், முதல் சட்ட மேலவை உறுப்பினரும், முதல் சட்டமன்ற உறுப்பினரும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் உதகை என்.சி.எம்.எஸ் கூட்டுறவு விற்பனை சங்கத்தினை ஆரம்பித்தவர் ராவ்பகதூர் எச்.பி ஆரிய கவுடர்.
இவரது மக்கள் சேவை காரணமாக சென்னையில் உள்ள மேற்கு மேம்பாலம் ரயில் நிலையத்தின் முன் உள்ள சாலைக்கு ஆரியகவுடர் சாலை எனவும், தமிழ்நாடு, கர்நாடக எல்லையான கூடலூர் தெப்பக்காடு நுழைவு வாயிலில் ஆரியகவுடர் பெயரில் நுழைவு வளைவினை அமைத்து தமிழக அரசால் கௌரிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது 129 ஆவது பிறந்தநாள் விழா இன்று உதகையில் உள்ள என்.சி.எம்.எஸ் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
மேலும் வளாகத்தில் உள்ள ஆரியகவுடர் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்பி அம்ரித், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் கப்பிச்சி வினோத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இவ்விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக இவரது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என படுகர் இன மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீலகிரியில் ஆரிய கவுடர் 129வது பிறந்த நாள் விழா
