சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுப்ரமணிய பாரதியாரின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் தமிழில் பாடி அசத்தியுள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழின் மாபெரும் கவிஞராக பாரதியார் திகழ்ந்தார். ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.
விடுதலை, பெண் உரிமை எனப் புரட்சி பாடல்களைப் பாடியுள்ளார். பாரதியின் வரிகள் விடுதலை உணர்வை தூண்டும் வகையிலும், எழுச்சிமிக்கதாகவும் இருக்கும். இவரின் பாடல் தொகுப்புகள் புத்தகங்களாக விற்பனை செய்யப்படுகிறது. பள்ளி முதல் கல்லூரி வரை பாரதியார் பாடல்கள் இல்லாமல் இல்லை. பாரதியார், மகாகவி என்று அழைக்கப்படுகிறார்.
இவரைச் சிறப்பிக்கும் வகையில் மாநில அரசு முதல் மத்திய அரசு வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி தலைவர்கள் உரை நிகழ்த்துகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
இந்தநிலையில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாரதியின் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளனர். இசைக்கு ஏற்ப பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோவை அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதைப் பகிர்ந்து பிரதமர் மோடி, இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள். என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.