

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கீழ வல்லானந்தபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (34). மதுரை வண்டியூர் அருகே, மஸ்தான்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மாநகர் பாஜ ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இவர், வண்டியூர், யாகப்பா நகரில் அரிசி அரவை மில் நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவரின், மில்லில் வேலை பார்க்கும் ரஞ்சித்குமார் என்பவர், சக்திவேலிடம் ரூ. 70 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார்.
கடனை திருப்பி கொடுக்காததால், இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித்துமார், தனது உறவினர்களான மருதுபாண்டி (27), தென்னரசு (21), ஆகாஷ் (27), அகிலன் (19) ஆகியோருடன் சேர்ந்து, வண்டியூர் ரிங்ரோட்டில் இருந்து, சங்கு நகர் செல்லும் வழியில் வைத்து, அரிவாளால் வெட்டி சரமாரியாக கொலை செய்தனர்.
இது குறித்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக, பாண்டியன் கோட்டை பிருந்தா நகர், கல்குவாரி பள்ளத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு போலீசாரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார் மற்றும் தென்னரசு ஆகியோர் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்ப முயன்றதில், மருதுபாண்டி மற்றும் ரஞ்சித்குமாருக்கு இடது காலும், தென்னரசுவுக்கு வலது காலும் உடைந்தன. இதையடுத்து, மீட்கப்பட்ட மூவரும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

