• Wed. May 15th, 2024

சென்னையில் நாளை 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Byவிஷா

Apr 29, 2024

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் உள்ள அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் காரணமாக அடையார், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மே 1-ம்தேதி காலை 9 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் அடையார் மண்டலத்தில் திருவான்மியூர், பள்ளிப்பட்டு கோட்டூர் கார்டன். ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளிலும், சோழிங்கநல்லூரில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *