கொரானா தடுப்பூசி விழிப்புணர்விற்காக ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியோடு தள்ளுவண்டியை இழுத்தபடி நடைபயணம் மேற்கொள்கிறார் இராணுவ வீரர் பாலமுருகன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பாலமுருகன் கடந்த 2008ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போதும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 197 நாடுகளின் தேசிய கொடிகளுடன் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 16 ம் தேதி முதல் நடைபயணத்தை தொடங்கினார்.
பாம்பன் பாலத்திலிருந்து அயோத்தி வரை சுமார் 2ஆயிரத்தி 800 கிலோமீட்டர் தூரத்திற்கு 197 நாடுகளை சேர்ந்த தேசிய கொடியை எந்தியபடி தள்ளுவண்டியை இழுத்தபடி நடை பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரர் மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்தடைந்தார்.
பின்னர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
விழிப்புணர்வு வண்டியில் கொரானா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊசிகளையும், முகக்கவசங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
இராணுவ வீரர் பாலமுருகன் நாள்தோறும் 30 கி.மீ., தூரம் வரை பயணிக்கிறார்.
கொரானாவிலிருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காத்துக்கொள்வது குறித்து இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார்.