• Fri. Mar 29th, 2024

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உட்பட அவருக்குச் சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டவர் இளங்கோவன். இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இளங்கோவன் மீது கடந்த 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளங்கோவன் மகன் பிரவின்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு உட்பட அவருக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இளங்கோவனின் சகோதரர் மற்றும் சகோதரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகளில் மூலம் வருவாய்க்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


புத்திர கவுண்டம்பாளையத்தில் இளங்கோவன் தற்பொழுது பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *