• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

Byவிஷா

Apr 15, 2024

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையிலும், குற்றவாளிகள் யார் என்று இன்னும் தெரியாத நிலையிலும், அக்கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இரண்டு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீஸார் வேங்கை வயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர். இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.
இவ்வளவு தூரம் விசாரணைகள் நடைபெற்றபோதும் இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கடந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
வேங்கைவயல் கிராமத்தின் முகப்பில் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என்று தெரிவித்துள்ளனர்.