• Tue. Apr 30th, 2024

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார்-சிங்கை ராமச்சந்திரன் பேட்டி

BySeenu

Apr 13, 2024

அண்ணாமலை தோல்வி பயத்தில் உலறுகிறார் என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது.”இந்திய வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சிக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.தேர்தல் பிரச்சாரம் காரணமாக அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாது என சொல்லியிருந்தேன்.
அதனால் எங்களது பிரதிநிதி பங்கேற்றார். இதனைப் பார்த்து நான் பயந்து விட்டதாக பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோவைக்காரனுக்கு பயம் இருக்காது. அண்ணாமலை மட்டுமின்றி அவரது பாஸ் மோடியிடமே பேசத் தயார். அவரது மொழியிலும் பேசத் தயார். அதிமுகவை அழித்து விடுவேன், டிடிவி தினகரன் பக்கம் அதிமுக வந்துவிடும் என அண்ணாமலை, தோல்வி பயத்தில் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இவர்களது கூட்டணிக்கு அதிமுக வர வேண்டுமென கடைசி வரை காத்திருந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு தான் கூட்டணி தேவை. எங்களுக்கு தேவை இல்லை.
3 ஆண்டுகளாக அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். இந்த காலத்தில் அவர் என்ன சாதித்தார்? நிறைகுடம் எப்போதும் தழும்பாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. அதிமுக 50 ஆண்டுகளில் பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. பாஜகவிற்கு நோட்டா உடன் தான் போட்டி நடக்கிறது. பாஜக கட்சியில் பல பிரச்சனைகள் உள்ளன. சீனியர்கள் அண்ணாமலையை மதிப்பதில்லை. ஓன் மேன் ஆர்மியாக அண்ணாமலை இருக்கிறார். அதிமுக மிகப்பெரிய இயக்கம். இதனை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். அண்ணாமலை பேச்சினால் பாஜக டெபாசிட் கூட வாங்கக்கூடாது என அதிமுக தொண்டர் வெறி கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை பக்குவம் இல்லாமல் பேசுகிறார். பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டது.
40 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தேர்தல் அறிக்கையை, ஒரு தொகுதிக்கு மட்டுமே வெளியிட்டுள்ளது. நூறு வாக்குறுதிகளை 500 நாட்களில் நிறைவேற்றுவார்களாம். 3500 நாட்களாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு ஏன் செய்யவில்லை? 3 ஆண்டுகளாக தலைவராக உள்ள அண்ணாமலை கோவைக்கு இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை. கோவைக்கு திமுகவும் எதுவும் செய்யவில்லை. பாஜகவும் எதுவும் செய்யவில்லை. அண்ணாமலைக்கு தேவை சேவை செய்வது அல்ல. எம்.பி பதவி தான். கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜகவினர் கூறுகிறார்கள். அதற்கு முதலில் மோடி அரசு அமைக்க வேண்டும். தொழில் துறையினர் ஜிஎஸ்டியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகர டப்பா உடன் வந்த அண்ணாமலை, ஹெலிகாப்டரில் தேனிக்கு பிரச்சாரம் செய்ய செல்ல காசு எங்கிருந்து வந்தது? அண்ணாமலை பொய் மேல் பொய் சொல்கிறார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் நாங்கள் கொடுத்துள்ளோம்.
கோவையில் திமுக, பாஜக பயத்தில் உள்ளது. பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் என யாரை கூப்பிட்டு வந்தாலும் அதிமுக தான் ஜெயிக்கும். பாஜக கீழ்தரமாக பிரிவினைவாத அரசியல் செய்கிறது. அமித்ஷா அதிமுகவை ஊழல் கட்சி என்கிறார். ஆனால் தேர்தல் பத்திரம் நிதியாக 6500 கோடி ரூபாய் வாங்கியுள்ளது. ஊழலைப் பற்றி பேச மோடி, அமித்ஷா, அண்ணாமலைக்கு தகுதியில்லை. டிஆர்பி ராஜா வெளியூர்காரர். ஸ்டார் ஹோட்டல் ரூம் போட்டு தங்கியிருந்து, ஒவ்வொரு அமைப்பாக பார்க்கிறார். அவர் மின்கட்டண உயர்விற்கு என்ன செய்தார்? திமுகவும் பாஜகவும் ஒன்று. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெரிய தலைவர்கள் என மோடி சொல்வது என்ன? உலகத் தமிழர்களே சொல்கிறார்கள். அதிமுகவே திமுகவை அழிக்க ஆரம்பித்த கட்சி தான். தூங்கும் போது கூட நாங்கள் திமுகவை எதிர்ப்போம். சோசியல் மீடியாவில் இருந்தால் மட்டும் ஜெயிக்க முடியாது. களத்தில் இருக்க வேண்டும். பாஜகவும், அண்ணாமலையையும் நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அண்ணாமலைக்கு பதில் சொல்வது அதிமுக தலைவர்களின் வேலை அல்ல எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *