

சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ராகுல்காந்தி பிரதமர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரையை நேற்று துவங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
இந்த விழாவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது..,
இந்தியாவில் சாமானியரின் ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடி ஒரு சாமானியன். குஜராத்தில் இருந்து வந்து 9 ஆண்டுகள் இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தி வருகிறார். பாரதத்தாய் விழித்து விட்டாள். ஆனால் தமிழ்த்தாய் விழித்து விட்டாளா என்பது தான் தற்போதைய கேள்வி என பேசினார்.
இது அண்ணாமலையின் பாதயாத்திரை கிடையாது. பாஜக தொண்டனின் பாதயாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் ஆசியுடன் இந்த பாதயாத்திரையைத் துவங்கியுள்ளேன். பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் உள்ளது. அடுத்த 168 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இடத்திற்கும் இதன் மூலம் செல்வோம். இதில் மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு வழங்க இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
மேலும், பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடியவர் பிரதமர் மோடி. அவர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் இந்தியா என்ற பெயரில் இங்கு ஒரு கூட்டணி இருக்கிறது. அந்த கூட்டணியை பொருத்தவரை திங்கள் கிழமை நிதிஷ்குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை சந்திரசேகர் ராவ் பிரதமர், வியாழக்கிழமை உத்தவ் தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை புதியவர் என குறிப்பிட்டார். மேலும் ராகுல் காந்தி பெயர் ஏன் சொல்லவில்லை என்றால் அவர் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் பிரதமராக இருப்பார் ஏன் என்றால், அப்போது அரசுக்கு விடுமுறை. விடுமுறை நாட்களில் பிரதமராக இருக்கக்கூடிய ராகுல்காந்தி தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை.
வரும், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமராக மோடி வருவார். அவர் வரும்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமா இந்தியா இருக்கும் என்று அவரே தெரிவித்துள்ளார். அதையும் நாம் பார்க்க தான் போகிறோம் என்று பாதயாத்திரை துவக்க விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றியுள்ளார்.
