• Tue. May 7th, 2024

கைத்தறியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை… ஆட்சியர்..!

ByKalamegam Viswanathan

Jul 29, 2023

மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தொடங்கி வைத்தார்.
மதுரை விளக்குத்தூண் அருகில் ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள எல்.என்.எஸ் இல்லத்தில் , தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆடி பட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி 28.07.2023 முதல் 11.08.2023 வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியில், புவிசார் குறியீடு பெற்ற காஞ்சிபுரம், கும்பகோணம், திருவண்ணாமலை பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், சேலம் வெண் பட்டு வேட்டிகள் மற்றும் கோவை ,திருப்பூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, கோரபட்டு சேலைகள், மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை காட்டன் சுங்குடி சேலைகள் மற்றும் பவானி ஜமுக்காளம் கால்மிதியடிகள் ஆகிய இரகங்களும், கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இரகங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. மேற்படி, இரகங்கள் அனைத்திற்கும் ஆடி தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடி 20 சதவிகிதம் முதல் 65 சதவிகிதம் வரை வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சிக்கு, அனைத்து பொது மக்களும் வந்து பார்வையிட்டு வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கண்காட்சி துவக்க விழாவில், துணை இயக்குநர் ப.மாதேஸ்வரன் மற்றும் மதுரை சரக கைத்தறித்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *