• Fri. Mar 29th, 2024

அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது: அன்னதானம் மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய சேகர் பாபு…

Byமதி

Oct 29, 2021

மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் உணவருந்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றதாகவும், ஆனால், முதல் பந்தியில் அமரக்கூடாது மற்றும் உணவு இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக, நரிக்குறவ பெண் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியது.

இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு, சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவ பெண் உள்பட பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நரிக்குறவ சமூதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் பக்கத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் பந்தியில் அன்னதானம் வழங்க மறுத்ததாக தெரிவித்திருந்தார். இந்த தகவல், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அப்பெண் உள்பட அனைவருடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவருந்தினோம். ஸ்தலசயன பெருமாள் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்காக, முதற்கட்டமாக ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி பாலாலயம் நடைபெற உள்ளது. மேலும், வருவாய் இல்லாத கோயில்களை, நிதி ஆதாரம் உள்ள கோயில்களுடன் உபகோயில்களாக இணைக்க முயற்சித்து வருகிறோம். இதன்மூலம், அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கும் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

நரிக்குறவ மக்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கோயில் வளாகத்தில் வேட்டி, சேலைகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திரு. ஜெயராமன், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் திரு.பாலசுப்ரமணி, திருக்கோயில் செயல் அலுவலர் திரு. சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *