• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் அன்னா ஹசாரே?

சமூக சேவகரான அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அன்னா ஹசாரே.

அப்போது அவர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒயின் விற்பனை தொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள உத்தரவு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாகக் கடந்த பிப.3ஆம் தேதியே மகாராஷ்டிர அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும் இருப்பினும், இதுவரை அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட கடைகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அம்மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது. இந்த புதிய சட்டத்தின்படி 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் மது வகைகளை விற்பனை செய்யலாம். இங்கு விற்பனை செய்யப்படும் வைனில் குறைந்த அளவு ஆல்கஹால் இருக்க வேண்டும் என்றும் இதற்காக ஆண்டுக்கு ரூ 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

மகாராஷ்டிரா அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மகாராஷ்டிர அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால் இந்த நினைவூட்டல் கடிதத்தை அனுப்புகிறேன். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது.

இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் (அஜித் பவார்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்யவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து குணமடைய வைப்பது தான் அரசின் கடமை. ஆனால், வருமானத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அதேபோல அம்மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் இதைக் கடுமையாகச் சாடியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில். “சிவசேனா தலைமையிலான அரசு மகாராஷ்டிராவை மத்ய-ராஷ்டிராவாக (மதுபான மாநிலம்) மாற்றும் முயற்சி தான் இது. அவர்களுக்கு மதுபான தொழிலின் மீதான காதலால் தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பு மதுவிலக்கு அமலில் இருந்த சந்திரபூர் மாவட்டத்திலும் இவர்கள் மதுவிலக்கை நீக்கியுள்ளனர். கலால் வரியையும் பாதியாகக் குறைத்துள்ளனர்” என்று சாடியிருந்தார்.