விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில்நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் தாங்கள் வந்த கார்களை சாத்தூர் புதிய அரசு மருத்துவமனை செல்லும் மெயின் சாலையில் நிறுத்திச் சென்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சாத்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் அரை மணி நேரமாக வெளியேற முடியாமல் தவித்து வந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் போக்குவரத்தை சரி செய்யவே சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரான நிலைக்கு வந்தது.
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டும் அரை மணி நேரமாக கண்டும் காணாமல் கூட்டத்தில் பேசி வந்த டிடிவி தினகரனை பார்த்த அப்பகுதி மக்களின் முகம் சுளித்தனர்.
மேலும் இந்த தனியார் திருமண மண்டபம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இரவு நேர நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இது போன்று அடிக்கடி போக்குவரத்து நெரிசல் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.