ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் இனிமேல் புகையிலை, மது விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர களப்பயிற்சியை தொடங்கியுள்ளன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில விளம்பரம் செய்ய வேண்டாம் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவை இயக்குநர் அதுல் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஐபிஎல் 2025 முதல் இனி வரும் ஐபிஎல் சீசன் போட்டிகளில், மது, சிகரெட் உட்பட எந்த போதை வஸ்துவைக்கும் ஊக்குவிக்கும் விளம்பரங்கள், எந்த ஒரு வரையிலும் இடம்பெற்று இருக்கக் கூடாது. கிரிக்கெட் விளையாட்டு இளைஞர்களை ஊக்குவிக்க பயன்படுகிறது எனினும், அதன் பேரில் போதை வஸ்துக்களின் விளம்பரத்தை ஊக்குவிப்பது நல்லதல்ல. ஆகையால், ஐபிஎல் போட்டியில் போதைப் பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்படுகிறது.
அத்துடன் போட்டியில் பங்கேற்கும் அணிகள், அவர்களின் விளம்பர யுக்திகளில் மேற்கூறிய விதிகளை செயல்படுத்திட வேண்டும் என்று அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கேன்சர், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் சிக்கும் 70 சதவீதம் மக்களின் உயிரும் பறிபோகிறது.எனவே, போதைப்பொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், ஐபிஎல் போட்டியில் இருந்து போதைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.