• Tue. Apr 22nd, 2025

ஆல்ரவுண்டர் அக்சர் படேல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன்!

ByP.Kavitha Kumar

Mar 14, 2025

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல், ஐபிஎஸ் 2025 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 31 வயதான அக்சர் படேல், 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1,653 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்சர் படேல் விளையாடி வருகிறார். இந்த சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடந்தது. அவரை விடுவிக்காமல் ரூ.16.50 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது. பஞ்சாப் கிங்ஸ் (68 போட்டிகள்) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (82 போட்டிகள்) அணிகளுக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணியை 23 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழி நடத்தி இருந்தார். அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை அக்சர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அக்சல் படேல் கூறுகையில், “டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனானதை எண்ணி பெருமை கொள்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்ந்துள்ளேன். மேலும், அணியை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என நம்புகிறேன். அதற்கு நான் தயாராக உள்ளேன்” என்றார்.