கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைக்கு சட்டமன்றம் தொடங்கியதும் நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் பேச்சு உள்ளது என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைக்கு இன்று காலையிலேயே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த அதிமுகவினர், அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவினரை வெளியேற்ற கூறிய சபாநாயகரின் உத்தரவைக் கண்டித்து அதன் கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிது நேரத்திற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் மற்றும் முதல்வரின் செயலைக் கண்டித்து பாமக மற்றும் பாஜக உறுப்பினர்களும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.