• Sat. Apr 27th, 2024

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து
தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்துக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித், செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் நீதிபதி ரவீந்திர பட்டின் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாக தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. தி.மு.க.வை பொறுத்தவரை இந்த வழக்கில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தது. ஆனாலும் கேசவானந்த பாரதி, இந்திரா சாஹ்னி (மண்டல் ஆணைய தீர்ப்பு) உள்ளிட்ட இந்த அமர்வைவிட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புகளுக்கு எல்லாம் முரணாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அரசியல் சட்டத்தின் அடையாளத்தை, அடிப்படை அம்சத்தை அழிக்கும் விதத்தில் ஒரு அரசியல் சட்டத்திருத்தம் அமையக்கூடாது என்பதுதான் இதுவரை பல்வேறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொன்வரிகள்.
அரசியல் சட்டம் வகுத்து தந்துள்ள சமத்துவத்துக்கு எதிராக எந்த சட்டத்திருத்தங்களும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம், காலமாக கவனமாக நிலைநாட்டப்பட்டு வரும் தீர்ப்புகள். ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பதுபோல் அமைந்திருக்கிறது. அதனால்தான் இந்த தீர்ப்பிலிருந்து மாறுபட்டு, முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை மீறுகிறது என்று 2 நீதிபதிகள் கொண்ட மைனாரிட்டி தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரவீந்திர பட், தனது தீர்ப்பின் தொடக்கத்திலேயே நம் நாடு குடியரசாகி 70 ஆண்டுகளில் முதல் முறையாக பாரபட்சமுள்ள, விலக்கி வைக்கும் தன்மையுள்ள கொள்கைகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிப்பதால், மெஜாரிட்டி (மூன்று நீதிபதிகள்) தீர்ப்புடன் நான் இணைந்து செல்ல மறுப்பதற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டுவிட்டே தனது தீர்ப்பை எழுதியுள்ளார். இறுதியில் இந்த அரசியல் சட்டத்திருத்தம் சமூகநீதியை வலுவிழக்கச்செய்து, அதன் மூலம் அரசியல் சட்டத்தின் அடிக்கட்டமைப்பை தகர்க்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே நாட்டில் உள்ள 82 சதவீத பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூக நீதியை காப்பாற்றிட, அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட, சமூகநீதிக்காக தொன்று தொட்டுப் போராடி வரும் தி.மு.க.வின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *