• Fri. Apr 26th, 2024

சிதம்பரம் நடராஜர் கோயில்
தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல
சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மன்னர்களால் சேர்த்துவைக்கப்பட்டு, விட்டுச் செல்லப்பட்டுள்ள நகைகள், சொத்துகள், விலைமதிப்பற்ற பொருட்களினுடைய நிலை குறித்து ஆய்வு செய்வது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி தனியார் மேல்நிலைப் பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது இல்லை. நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில். அந்த திருக்கோயிலில் வருகின்ற வருமானங்கள் குறித்து முறையாக கணக்கு கேட்கின்றபோது, கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை.
அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும்போதும், பதிலளிக்க வேண்டியது அவர்களுடைய கடமை.
திருக்கோயிலின் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு மானாவாரியாக கட்டடங்களை எழுப்பியிருக்கின்றனர். அவ்வாறு எழுப்பியுள்ள கட்டடங்கள் குறித்து கேள்வி கேட்பது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை.
அந்த திருக்கோயிலில் மன்னர்களால் சேர்த்துவைக்கப்பட்டு, விட்டுச்சென்றுள்ள நகைகள், சொத்துகள், விலைமதிப்பற்ற பொருட்களினுடைய நிலை குறித்து ஆய்வு செய்வது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. எனவே எங்களுடைய பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. தாராளமாக அவர்கள் அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதற்கு சரியான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *