• Fri. Apr 26th, 2024

லாரி டிரைவர் லுங்கி கட்டியதற்கு அபராதம்..!

சென்னை எண்ணூரில் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியதாக கூறி ஓட்டுநரிடம் ரூ.500 அபராதம் விதித்த காவல்துறையை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பன்மடங்கு அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து போலீசார் சம்பந்தமே இல்லாத காரணங்களை கூறி அபராதம் வசூலித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விக்ரம் நடித்த சாமி படத்தில் பைக் ஓட்டிச் செல்லும் நடிகர் விவேக்கிடம் டிராபிக் போலீஸ் ஒருவர் அனைத்து ஆவணங்கள் இருந்தும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அபராதம் வசூலிக்க முடிவு செய்து, 8க்கு பதில் ஏழரை போட சொல்வார். நகைச்சுவை காட்சியாக இருந்தாலும் இது பலரை சிந்திக்க வைத்தது.
இதேபோன்ற நிஜ சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. சைக்கிள், காரில் சென்றவர்களிடம் கூட ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி அபராதம் வசூலித்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறி உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் காக்கி சட்டை அணிந்தும் கலர் லுங்கி உடுத்தி இருந்ததற்காக போலீஸ் அதிகாரி லாரி ஓட்டுநரிடம் அபராதம் விதித்து உள்ளார்.
சென்னை எண்ணூர் அருகே துறைமுக சாலையில் எம்.எஃப்.எல். சந்திப்பில் செல்லும் லாரிகளிடம், ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி என்பவர் ஆவணங்கள், சீருடையை பார்த்து போக்குவரத்து விதிகளை மீறி இருந்ததாக கூறி அபராதம் வசூலித்து வந்தார்.
காரில் இருந்தபடியே அபராதம் வசூலித்த அந்த அதிகாரியின் கண்ணில் ஒரு லாரி பட்டது. உடனே அதை வழிமறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, ஓட்டுநரிடம் ஏன் பேண்டு அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதித்து இருக்கிறார். அப்போது தன்னை நோக்கி அந்த அதிகாரி கை ஓங்கி அடிக்க வந்ததாக கூறி லாரி ஓட்டுநர் அழுததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகி பலரை அதிர்ச்சியடைய செய்தது. இதனை தொடர்ந்து சென்னை ட்ரெய்லர் மற்றும் டாரஸ் லாரி ஓட்டுநர் நல சங்கத்தினர் ஒன்றுகூடி சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர்களை தாக்காதே.. யூனிஃபார்ம் வழக்கு போடாதே என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.
அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் நலச்சங்கத்தினரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர்கள் மீது தேவையற்ற வழக்குகள் போடப்படாது எனவும், வழக்கு பதிவு செய்யப்பட்டால் புகார் கொடுக்கலாம் எனவும் கூறிய போலீசார், லாரி ஓட்டுநர்கள் சீருடை அணிவது தொடர்பாக ஆலோசிப்பதாகவும்
தெரிவித்தனர்.
போலீசார் அளித்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்ட லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் பேசுகையில், சென்னை துறைமுகத்தில் 12 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அனைத்து பிரச்சனைகளுக்கும் துறைமுகமே காரணம்.
இங்கு வரும் ஏராளமான லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்து உள்ளனர். 8 மணி நேரம் வேலை செய்பவராக இருந்தால் சீருடை கேட்கலாம். ஆனால், லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரமும் வண்டியிலேயே தங்கி வாழ்கிறார்கள். அவர்கள் நிலையை மனிதாபிமானத்தோடு பார்க்க வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *