• Wed. May 8th, 2024

5 வருடங்களுக்கு பிறகு…மாநகராட்சிகளில் பட்ஜெட் தாக்கல்

5 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சிகளில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது, தமிழக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
2016க்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், தனி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்த கமிஷனர்களே, 2017-18, 2018-19, 2019-20, 2020-21, 2021-22 ஆகிய ஐந்து நிதியாண்டுகளில், பட்ஜெட் தாக்கல் செய்து வந்தனர்.இப்போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த 28 வயதான பிரியா பொறுப்பேற்றார்… 3வது முறையாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை, ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளார்.. முதல் பட்டியலின பெண் மேயராகவும் பிரியா பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல அனைத்து மாநகராட்சிகளிலும் மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளனர்… புதிய மாமன்ற கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்ஜெட் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார். துறை வாரியாக அதிகாரிகளிடத்தில் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், சென்னையை பொறுத்தவரை, சிங்கார சென்னை 2.0 திட்டம், புதிய மேம்பாலங்கள், மழை நீர் கால்வாய்கள், ஸ்மார்ட் சிட்டி, கழிவு நீர் கால்வாய்கள் போன்றவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.

பருவமழையின் போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் இனிவரும் காலங்களில் மழை சீராக வெளியேறி செல்ல எடுக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்துதல், கல்வி, வரி சீரமைப்பு செய்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற இந்த பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், நகரை அழகு படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள், 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு – செலவு உத்தேச திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், அதற்கான வேலைகளில் மாநகராட்சிகளின் அனைத்து துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்ஜெட் கூட்டம் நடத்துவதற்கு முன்பாக நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி தேர்வு செய்யப்பட்டால் நிதிக்குழு தலைவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்… ஒருவேளை நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் தாமதமாக நடந்தால் மேயரே பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதுபோலவே, கோவை மாநகராட்சியிலும் பட்ஜெட் தயாரிக்கும் பணியில், கணக்குப் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்… மாநகராட்சி கணக்கு பிரிவினர் தயாரித்து கொடுக்கும் அறிக்கையை, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர், அக்குழு கூட்டத்தில் விவாதித்து, இறுதி செய்து, மாமன்றத்தில் மேயர் வசம் ஒப்படைப்பர்… மேயர், மன்றத்தில் தாக்கல் செய்து, பட்ஜெட் மீது உரை நிகழ்த்துவார். ஏற்கனவே அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய திட்டங்களை வெளியிடுவார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *