• Sun. Feb 9th, 2025

அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றி!!!

BySeenu

Feb 5, 2025

கோவை அரசு மருத்துவமனையில் வரலாற்று சாதனை, தமிழகத்திலேயே முதல் முறையாக அதிநவீன CRT-D பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றியடைந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை தனது இதயவியல் துறையில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக, CRT-D எனப்படும் அதிநவீன பேஸ்மேக்கர் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருப்பூரை சேர்ந்த 54 வயதான சரவணகுமார் என்பவர் வென்ட்ரிகுலர் டாக்கி கார்டியா எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்தது. இதை அடுத்து, மருத்துவர்கள் அவருக்கு CRT-D எனப்படும் அதிநவீன கருவியை பொருத்த முடிவு செய்தனர். CRT-D என்பது இதயத் துடிப்பை முறைப்படுத்த உதவும் ஒரு சாதனம். இது இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அல்லது திடீர் இதய மரணம் ஏற்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாகும். கடந்த 24.1.25 அன்று சரவணகுமாருக்கு CRT-D கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறுகையில் :-

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் தான் இந்த CRT-D எனும் அதிநவீன கருவி பொருத்தப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதற்கு 10 லட்சம் வரை செலவாகும் என்றார். மேலும் இதில் வெற்றிகரமாக செயல்பட்ட கோவை அரசு மருத்துவமனையின் இருதயத்துறைத் தலைவர் மருத்துவர் ஜே.நம்பிராஜன் மற்றும் இருதயத்துறை மருத்துவர்கள் டி.சக்கரவர்த்தி, ஜே.ஜெகதீஷ், ஏ.என்.செந்தில், மருத்துவர் கே.சதீஷ் குமார், மற்றும் மருத்துவர் டி.மணிகண்டன் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார்.