• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தற்காலிகப் பேராசிரியர்களுக்கு பணிப்பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை

Byவிஷா

Feb 12, 2024

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பேராசிரியர்களுக்கு பணிப்பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி மையம் வாயிலாக 19 இளநிலை, 21 முதுநிலை, 21 பட்டயம் மற்றும் 17 சான்றிதழ்கள் என மொத்தம் 78 வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர். இவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படுவது வழக்கமாகும். அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துவிட்டு தற்காலிகப் பேராசிரியர்களாக பலர் நீண்டகாலமாக பணிபுரிகின்றனர்.
ஆனால், அவர்களுக்கான பணிப்பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக தற்காலிக பேராசிரியர்களுக்கு ஊதியம்கூட 3 மாதத்துக்கு ஒருமுறையே அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் தற்காலிக பேராசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார் கடிதம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.சத்தியசீலன் கூறும்போது,
‘‘கடந்த ஒராண்டு காலமாகஎங்களுக்கான ஊதியம் 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. இது எங்களை மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, ஊதியத்தை மாதந்தோறும் வங்கியில் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கும் பொருட்டு அடையாள அட்டை, அனுபவச் சான்று போன்றவற்றை வழங்க வேண்டும். யுஜிசி வழிகாட்டுதலின்படி ஊதியம் (ரூ.50,000), மருத்துவ விடுப்பு ஆகியவை வழங்க வேண்டும். நீண்டகாலம் தற்காலிகமாக பணிபுரிவோரை நிரந்தரப்படுத்த வேண்டும்’’ என்றார்.