• Sat. Nov 7th, 2026

கோவை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..,

BySeenu

Nov 7, 2026

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 55 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அறிவியல் ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலம் 35 கி.மீ. உயரத்துக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

‘உயர்வு’ எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்று, சுமார் 2 கிலோ எடையுள்ள ஆய்வுக் கருவியை உருவாக்கினர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஏவப்பட்ட இந்தக் கருவி, வளிமண்டலத்தின் அடுக்கு மண்டலப் பகுதியை அடைந்து, வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், உயரம் மற்றும் காற்றில் உள்ள நுண்துகள்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தது.

இந்த ஆய்வுப் பயணத்தின்போது 35 கி.மீ. உயரத்திலிருந்து பூமியைப் படம்பிடித்த புகைப்படங்கள் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன.

ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ், இஸ்ரோ அங்கீகாரம் பெற்ற ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் மற்றும் CSTERC டெக்னோ சயின்ஸ் நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தின. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 ஆதரவளித்தது.

அடுத்தகட்டமாக, 11 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 330 மாணவர்கள் ஆய்வுக் கருவி சேகரித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தரம் குறித்து ஆய்வு அறிக்கைகள் தயாரிக்க உள்ளனர். அவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விண்வெளி அறிவியல் மற்றும் நேரடி ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் எனத் திட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ். மாருதி, திட்டத் தலைவர் வித்யா தத்தமங்கலம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் பிரபு, விஞ்ஞானி சுரேந்தர் பொன்னழகர், பரத்குமார் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.