கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக ஊர் மக்கள் சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

அரசு நிர்ணயித்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்புக்கு 200 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக ஊராட்சித் தலைவர் மற்றும் நிர்வாகம் 7000 ரூபாய் பொதுமக்களிடம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. 7000 ரூபாய்க்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்றும், 200 ரூபாய்க்கு மட்டுமே வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 7000 ரூபாய் கொடுக்க முடியாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக மனு செய்தும் இதுவரை குடிநீர் இணைப்புகள் அவர்களுக்கு வழங்கவில்லை. நில பட்டா வீடு இல்லாதவர்களுக்கு, 7000 ரூபாய் கொடுத்தவர்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கியதாக குற்றச்சாட்டு கூறுகிறார்கள்.

இது சம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அனனவருக்கும் ஆதரங்களுடன் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நீண்ட காலத்துக்கு பின்னர் நேற்று கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி வந்த ஏழை மக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வேறு வழியின்றி இன்று மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகத்தை விடுமுறை நாள் என்றும் பார்க்காமல் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல் ஜீவன் திட்டத்திலும் கூட குடிநீர் இணைப்பு விண்ணப்பம் செய்து அதிலும் இவர்களுக்கு ஏழு ரூபாய் கொடுக்காததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.