விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.

இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். ஆடி மாத வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும். இதனால் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி சங்கரன்கோவில் சிவகாசி, ராஜபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாகவும் சில பகுதிகளில் மொத்த கிராம மக்களும் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர்.

இவ்விழா காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி ராஜபாளையம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆடிப்பெரும் திருவிழாவான பிரம்மோற்சவ திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெறுவதை ஒட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு தொட்டில் குழந்தை உருண்டு கும்பிடுதல், அழகு குத்துதல், முடிகாணிக்கை பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்திய வண்ணம் உள்ளனர்.
ஆடி மகா உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியான உற்சவ அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி இன்று மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இன்று காலை அர்ஜுனா நதி ஆற்றங்கரையில் முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது 24 மணி நேர மருத்துவ ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் உள்ளது
மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிதண்ணீர் கழிப்பிட வசதி குளியலறை தங்குமிடம் தாய்மார்களுக்கு பால் ஊட்டும் அறை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.





