• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கும்பாபிஷேகத்திற்காக தனித்துறை அமைக்க வேண்டும் ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் வலியுறுத்தல்..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் கும்பாபிஷேகத்திற்காக தனித்துறை அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகளை ஒருங்கிணைத்து, கண்காணித்து, உரிய காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மாநில அளவில் தனித்துறை ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்.

கோவில்களின் ஆகம மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் உரிய கால இடைவெளியில் நடைபெற வேண்டும். பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை பல கோயில்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நீண்ட கால தாமதங்கள் இனி ஏற்படாத வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களின் கும்பாபிஷேக கால அட்டவணையை இந்து சமய அறநிலையத்துறை தயாரித்து பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.

அறநிலையத்துறையில் தனித்துறை ஏற்படுத்தி ஆகமம், கோவில் மரபு மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பணிகளைத் திட்டமிடுதல், திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகப் பணிகளை உரிய காலத்தில் தொடங்கி முடிப்பதை கண்காணித்தல், கும்பாபிஷேகப் பணிகளுக்கான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடியும்.

எனவே தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் கும்பாபிஷேகப் பணிகளுக்காக மாநில அளவில் தனித்துறையை உடனடியாக உருவாக்க வேண்டும். மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை ஆதீனம் சார்பிலும் இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு யானை வாங்கித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்கியுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு, தமிழக அரசுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.