• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஆ.மணிகண்டன் தமிழ்நாடு முதல்வருக்கு ஓர் அறிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

கற்பித்தலில் ஏற்படும் சுணக்கத்தைத் தவிர்க்க கல்வி சாராத பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் – பள்ளிக்கு ஒரு நலத்திட்ட அலுவலர் நியமனம் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில், கல்வி சாராத அலுவலக மற்றும் நலத்திட்டப் பணிகளிலிருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:

பள்ளிகளில் விலையில்லாப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள், மிதிவண்டிகள், புத்தகப் பைகள், காலணிகள், மடிக்கணினிகள் வழங்குதல் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு மாணவர் நலன் சார்ந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனுடன் தற்போது புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தை பள்ளி நேரத்திற்கு முன்னதாகப் பள்ளிக்கு வந்திருந்து ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்வி சாராத இதர நிர்வாகப் பதிவேற்றம் மற்றும் மாணவர் நலத்திட்டப் பயனாளர் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது போன்ற தொடர் பணி நெருக்கடிகள் ஆசிரியர்களுக்குக் முழுமையாகக் காத்துக்கிடக்கின்றன. இந்தச் சூழலில், காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணிகளும் சேர்வதால் ஆசிரியர்களின் பெரும்பகுதி நேரம் அலுவல் பணிகளிலேயே செலவிடப்பட்டு, வகுப்பறை கற்பித்தல் பணியில் தவிர்க்க முடியாத சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, ஆசிரியர்கள் தங்களது முழுமையான கவனத்தை வகுப்பறை கற்பித்தல் மற்றும் கல்விப் பணிகளில் மட்டுமே செலுத்த வழிவகை செய்யும் வகையில், ஒவ்வொரு பள்ளிக்கும் கல்வி சாராத பணிகளைக் கவனிக்கத் தனிப்பணி அலுவலர்களாக ஏற்கனவே பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்றி வரும் சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களை “சத்துணவு மற்றும் மாணவர் நலத்திட்டப் பணியாளர்கள்” என்ற புதிய பதவியின் கீழ் ஈர்ப்பு செய்து, அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

சத்துணவுப் பணியாளர்களை இத்தகைய நலத்திட்டப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம், ஆசிரியர்கள் அலுவல் மற்றும் நலத்திட்டச் சுமையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இதனால் அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திறனும், கல்வித் தரமும் தடையின்றி மேலும் சிறப்பாக நடைபெறும்,

ஆகவே, மாணவர்களின் நலன் மற்றும் ஆசிரியர்களின் கல்விப் பணியைக் கருத்தில் கொண்டு, சத்துணவுப் பணியாளர்களை “சத்துணவு மற்றும் மாணவர் நலத்திட்டப் பணியாளர்கள்” என்று மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.