நூறாண்டுகள் கண்ட பாரம்பரியப் பெருமை மிக்க குடை வீடு என்றழைக்கப்படும் இந்த பங்களா தனது 100ஆவது வயதை வெகு விமரிசையாக அதன் உரிமையாளர்களால் கொண்டாட இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மதுரையின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்துள்ள இந்த வீட்டின் பெருமைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.

மதுரா கோட்ஸ் எதிரேயுள்ள அழகரடி-ஆரப்பாளையம் சாலையில் சுமார் 200 அடி சென்று இடதுபுறம் பார்த்தால், அழகான அந்த வீடு காண்போரை ஒரு கணம் மெய் சிலிர்க்க வைக்கும். மூன்று தளங்களைக் கொண்ட அந்த வீட்டை, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடைவீடு என்றே அழைக்கிறார்கள். இந்த வீட்டின் மேல் தளத்தில் இடது மற்றும் வலது புறத்தில் உள்ள குடை போன்ற அமைப்பே இப்பெயர் உருவானதற்குக் காரணம்.

தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் அழகும் நேர்த்தியும் ஒரு புறமென்றால், இதன் மாறா பழமை மற்றொரு சிறப்பிற்குரியது. கடந்த 1926-27இல் கட்டப்பட்டு நூற்றாண்டுப் பெருமை கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பெருமைக்குரிய வீட்டின் உரிமையாளர்கள் இன்றைக்கு சுமார் 200 பேர் ஆவர். வருகின்ற 2027ஆம் ஆண்டு தைமாதம் 100-ஆவது வயதைக் கொண்டாட இருக்கிறது இந்த ‘சந்திரோதய பங்களா’.

மதுரை மாநகரில் நூற்றாண்டுப் பாரம்பரியமும் பெருமையும் கொண்ட கட்டடிங்கள் மிக மிகச் சிலவே. அவற்றுள் இன்றைக்கும் தொடர்ச்சியாக வீடாகவும், குடும்பப் பயன்பாட்டிலும் உள்ளது இந்தக் குடைவீடுதான். அதிலும் குறிப்பாக, பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து சென்ற வீடாகவும், மதுரையின் முதல் மேயர் முத்துவின் அரசியல் வாழ்க்கைக்கு கட்டியம் கூறி வாழும் சான்றாகவும் திகழ்கிறது இந்தக் குடைவீடு.

தியாகி வைத்தியநாத ஐயரோடு இணைந்து, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திய ஆர்.எஸ்.நாயுடு, 1930-களில் மதுரை நகராட்சியின் தலைவராக இருந்தார். அச்சமயம் அவரோடு துணைத் தலைவராக இருந்து பொதுமக்களின் நலன் சார்ந்து இயங்கியவர்தான் சண்முகம் பிள்ளை. குடை வீடு என்றழைக்கப்படுகின்ற சந்திரோதய பங்களாவின் உரிமையாளரும்கூட. ஆர்.எஸ்.நாயுடுவும் சண்முகம் பிள்ளையும் மிக நெருங்கிய நண்பர்கள். அதனாலேயே இந்த வீட்டை சண்முகம் பிள்ளை கட்டுவதற்கு பெரிதும் துணை நின்றவர் ஆர்.எஸ்.நாயுடு. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இதனை நெடுங்காலமாக ஆர்.எஸ்.நாயுடு பங்களாக என்றே அழைத்து வந்தனர்.
சண்முகம் பிள்ளையின் பூர்வீகம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலை கிராமம். தன் சிறிய வயதில் பெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மதுரைக்குப் புலம் பெயர்ந்து பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் மதுரா கோட்ஸ் என்றழைக்கப்படுகின்ற அன்றைய ஹார்வி மில்லில் தனது 16 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மில்லில் வேலை செய்வோருக்கு மாத ஊதியம் ரூ.12. சண்முகம் பிள்ளை சிறிய பையன் என்பதால் பாதிச் சம்பளமாக ரூ.6 பெற்று வந்தார். அன்றைக்கு சுமார் 20 ஆயிரம் பேர் அந்த ஆலையில் வேலை செய்துள்ளனர். பிறகு அந்த வேலை பிடிக்காமல் வெளியேறியபோது, ஆலைத் தொழிலாளர்களின் குடும்பத் தேவைகளுக்கான பலசரக்குக் கடையை உருவாக்கி சிறிது சிறிதாக வாழ்வில் உயரத் தொடங்கினார்.
இது குறித்து சண்முகம் பிள்ளையின் 2ஆவது மகனும் தற்போது 93 வயது ஆகும் ஜனநாதன் என்ற துரை கூறுகையில், ‘தவணை, ஏலச்சீட்டு, ஜவுளி என பல்வேறு தொழில்களைச் செய்ததுடன், அவை விரிவடைந்தபோது, ஊரிலுள்ள தனது சகோதரர்கள் 5 பேரையும் தன்னோடு வரவழைத்து, அவர்களுக்கும் கடைகள் வைத்துக் கொடுத்தார். வங்கிகள் பெரும்பாலும் இல்லாத அந்தக் காலகட்டத்தில், ஆலைத் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய சேமிப்பு நிறுவனமாகவும் செயல்பட்டு வந்தார். அவர்களிடம் பெற்ற சேமிப்புப் பணத்தை மிகவும் பத்திரப்படுத்தி, அவற்றை உரிய வட்டியோடு திரும்ப வழங்கினார். இதனால் அவரது புகழ் இந்தப் பகுதியில் பரவியது. அது மட்டுமன்றி, மதுரை நகராட்சியின் கவுன்சிலருக்குப் போட்டியிட்டு வென்று, நகராட்சியின் துணைத் தலைவராகவும் உயர்ந்தார். அவரது மக்கள் சேவையைப் பாராட்டி, இங்குள்ள தெருக்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டன’ என்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் தற்போது அவரது குடும்பத்திற்கும் நெருக்கமான வழக்கறிஞராகச் செயல்படும் சண்முக சுந்தரம், சண்முகம் பிள்ளையின் மூத்த மகனான ராஜகோபாலின் மகன் ஆவார். மூத்தவர்களின் வழிகாட்டுதலில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை மூத்தவர்கள் ஒருங்கிணைப்பில்தான், குடைவீட்டின் நூற்றாண்டு சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காகவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பல லட்சங்கள் செலவில் குடைவீடு பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது தரைத்தளம் முழுவதும் ஆத்தங்குடி டைல்ஸ்களால் பளபளப்பாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய ஜனநாதன், ‘இந்த வீட்டின் சுவர்களில் ஆணி அடிக்கக்கூட முடியாது. சுண்ணாம்பு, சுர்க்கி, முட்டை வெள்ளைக்கரு, கடுக்காய் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து உருவாக்கப்பட்ட கலவையில் கட்டப்பட்டதாகும். இந்த வீடு கட்டும்போது, அரைமண் உருவாக்குவதற்காக அரைவை ஆலையே பக்கத்தில் இயங்கியது. நீங்கள் நம்பமாட்டீர்கள். அன்றைக்கு இந்த வீட்டை ரூ.35 ஆயிரம் செலவில் கட்டி முடித்தார் என்னுயை அப்பா. அவருடைய கடுமையான உழைப்பும், மக்கன் நலன் சார்ந்த சேவையும் இன்றைக்கும் இப்பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது’ என்கிறார் பெருமிதத்துடன்.
ஜனநாதனின் சித்தப்பா மகன் கேசவன் பிள்ளை இந்த வீட்டின் மேல் தளத்தில் வசிக்கிறார். நம்மிடம் பேசிய அவர், ‘ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை ஒட்டி ஒரு வாரத்திற்கு எங்களது அனைத்து உறவினர்களும் இங்கு வந்துவிடுவார்கள். மிகுந்த கொண்டாட்டமாக இருக்கும். தற்போது சென்னை மட்டுமன்றி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, லண்டன் போன்ற நாடுகளிலும் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தோர் அனைவரும் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் வருகின்ற தைப் பொங்கலுக்கு வருகை தர உள்ளனர். இது நூற்றாண்டு என்பதால் இன்னும் கொண்டாட்டமாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு எங்க வீட்டுப் பிள்ளை படம் வெற்றி பெற்ற பிறகு அதன் விழாவில் பங்கேற்க வந்த எம்ஜிஆர், தற்போது நீங்கள் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில்தான் எங்களோடு உரையாடினார். அதனை நாங்கள் எப்போதும் மறக்க முடியாது என கண்களில் பெருமை மிளிர நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.




