பெரம்பலூர் அடுத்த பாடாலூரில், பழுதாகி நின்றுக் கொண்டிருந்த கிரேன் மீது டிப்பர் லாரி மோதியதில் 3பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் சந்தைப்பிரிவு சாலை அருகே நேற்று மாலை அரசு விரைவு பேருந்து ஒன்று டயர் வெடித்து நின்றது.
அப்போது அந்தப் பேருந்தை மீட்டெடுக்க கிரேன் மூலம் மீட்பு பணி நடந்து கொண்டிருந்தபோது கிரேனில் பழுது ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாடாலூர் மேம்பாலம் அருகே போக்குவரத்தை தடை செய்து தடுப்புகளை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு, வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக செல்ல மாற்றம் செய்துள்ளனர்.

அப்போது, பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த ஹெவி லோடு டிப்பர் லாரி தடுப்புகள் மீது மோதியதுடன் அவற்றை தூக்கி எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பழுதாகி நின்ற கிரேன் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், கிரேனுக்கு கீழ் பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த சுங்கசாவடியின் யூனிட் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் விஜய், (30), என்பவருக்கு இருகால்கள் மீது கிரேன் ஏறி இறங்கியது.
இதில் அவரின் இருகால்களும் பலத்த காயத்துடன் சேதமடைந்து கூக்குரலிட்டு அழுது துடிதுடித்தார்.
கிரேன் ஆப்ரேட்டரான கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள செங்கமேடு கிராமத்தை சேர்ந்த நாட்டான் மகன் இளையராஜா (41) என்பவரும் பலத்த காயமடைந்தார். விபத்தில் லாரியின் முகப்பு அப்பளம் போல் நொறுங்கியது. லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த நாகமுத்து மகன் ஆனந்த் (40) லாரியில் சிக்கிக் கொண்டு பலத்த காயமடைந்து அலறினார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் உதவியுடன் மீட்டு காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தை மீட்க வந்த கிரேனுக்கு ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.