• Tue. Dec 10th, 2024

கமுதியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோத திருவிழா..!

Byவிஷா

Oct 9, 2023
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விநோதமான கிடாவிருந்து  திருவிழா நடைபெற்றது. 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை.  இதனால் நீர் இருப்பு குறைவாகவே இருந்து வருகிறது. பயிர்கள் நீரின்றி வாடுகின்றன. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போதியளவில் மழை இல்லை என்றால் இந்த முறை தங்களால் விவசாயமே செய்ய முடியாதோ என்ற நிலைக்கு  விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக கோவில்களில் பலவித சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் தொடங்கிப் பல வழிகளில் மழை வேண்டி பிரார்த்தனைகள்  நடைபெற்று வருகின்றன. அதே போல் ஒரு வினோதமான பூஜை தான் இப்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடந்துள்ளது. 
கமுதி அருகே மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் காட்டுப் பகுதியில் குவிந்து  ஆண்கள் 101 ஆடுகளைப் பலியிட்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். மேலும், பூஜையில் கலந்து கொண்ட ஆண்களுக்காக அதிகாலையில் அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு என்ற கிராமத்தில் தான் இந்த விநோத விருந்து.  மழை பெய்யவில்லை என்றால் மழைக்கு வேண்டி ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறப்பு வழிபாடான   கிடா  விருந்து நடத்தப்பட்டது. முதல்நாடு கிராமத்தில் விவசாயப் பணிகளுக்குச் சரியான நேரத்தில் மழை பெய்ய வேண்டி, எல்லைப் பிடாரி அம்மனுக்கு மண் பீடம் அமைத்து இந்த சிறப்புப் பூஜை நடைபெற்றது. காட்டுப் பகுதியில் நடந்த இந்த வினோத வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும்  3வது புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் இந்த திருவிழா, இந்தாண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது.  
101 கிடா ஆடுகளையும் பலியிட்டு எல்லைப் பிடாரி அம்மனுக்கு படையல் இட்டனர்.  பூஜையில் கலந்து கொண்ட ஆண்களுக்குப் பிரசாதமாகக் கறி விருந்தும் நடைபெற்றது. ஆட்டுக் கிடாவை கைக்குத்தல் அரிசிச் சாதத்துடன் உருண்டைகளாக பிடித்து அதை அப்படியே சாமிக்குப் படைத்தனர். எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜைகள் முடிந்தபிறகு சாத உருண்டைகளில் கறிக் குழம்பைச் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டன. இந்த வழிபாட்டில்   கமுதி சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். இங்கிருந்த பொருட்களை  பெண்கள் பார்க்கக் கூடக் கூடாது என்பதால் மீதியிருந்த உணவு, பூஜை பொருள்களை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.