முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானையால் பெரும் பரபரப்பு நிலவியது.
மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த ஆன்மீகத் தலத்தில், சமீபகாலமாக வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து வருவது பக்தர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கிய அந்த யானை, திடீரென மருதமலை பேருந்து நிலையத்திற்குள் கம்பீரமாக நுழைந்ததைக் கண்ட கடை வியாபாரிகள், பொதுமக்கள் நிலைகுலைந்து போயினர்.
வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்தப் பகுதிகளில் யானைகள் புகுந்து சேதங்களை விளைவிப்பதைத் தடுக்க, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலும், இந்த ஒற்றை யானை பேருந்து நிலையத்தின் வந்து உள்ளது. அருகே கடைகள் வைத்து இருந்த வியாபாரிகள், யானையின் சத்தத்தைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
யானையை விரட்டுவதற்காகப் பொதுமக்கள் பெரும் கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த அபாய ஒலியை (Siren) எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.





