மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள தனியார் மஹாலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் “அரசியலமைப்பு படுகொலை நாள்” மற்றும் “அவசரநிலை பிரகடன நாள்” கருத்தரங்கம் மற்றும் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாஜக மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலப் பொதுச்செயலாளர் பொன். V. பால கணபதி மற்றும் மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடன சட்டத்தால், இந்தியா முழுவதும் இருந்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எவ்வாறு பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அன்றைய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி, பாரதிய ஜனதா கட்சியினர் சந்தித்த துயரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதற்குப் பிந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் அரங்கேறிய பல்வேறு அடக்குமுறைகள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கக் கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.



