மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன் இருந்த நக்கீரர் தோரண வாயில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் போது தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் முன்பு உள்ள நக்கீரர் தோரண வாயில்
உள்ளது. 1981-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஐந்தாம் உலகத்தமிழ மாநாடு நடத்தப்பட்டது. அப்போது மதுரை நகரின் கிழக்குப் பகுதியில் நக்கீரர் தோரண வாயில் அமைக்கப்பட்டப்பட்டது. இதன் வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் கடந்து செல்லுகின்றன. எனவே, இந்த தோரணவாயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதனை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதனையடுத்து நக்கீரர் தோரணவாயில் இடிக்கும் பணியானது நேற்று இரவு நடைபெற்றது. அப்போது போக்குவரத்து, பொதுமக்ககள் நடமாட தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டது. இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக தோரண வாயிலை இடிக்கும் பணி நடைபெற்றது அப்போது தோரண வாயில் ஒருபுறம் உள்ள தூண் இடிக்கப்பட்ட போது அது சரிந்து பொக்லைன் இயந்திரத்தில் விழுந்தது.
இதில் பொக்லைன் ஆபரேட்டரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நாகலிங்கம்(21) என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பி காயமடைந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகலிங்கத்தின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோரண வாயில் இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாடு செய்யாததால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



