

ஒரு தாய் தன் மகனின் கல்விக்காக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசின் கரும்புள்ளியாக உள்ளது என முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்..,
விபத்தில் இறந்தால் கல்லூரியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என ஒரு தாய், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம், நம்முடைய தமிழ்நாட்டுக்கே ஒரு தலைப்பு செய்தியாக இருக்கிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றுகின்றார். அவர் தன்னுடைய மகனின் படிப்புக்காக உதவி கிடைக்கவில்லை, தன் பெற்ற பிள்ளையின் கல்விக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டார். இன்றைக்கு மாணவனின் தாய் உயிரை மாய்த்த வேதனை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தீர்வு காணுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159 யில் தமிழக கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கி கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஒரு ஆண்டுக்குள் வங்கி கடனை செலுத்தாவிட்டால், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வாங்கிய கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என்று கூறியுள்ளனர். ஆனாலும் வங்கிகளில் மாணவர்களுக்கு எந்த கடனும் பெற முடியவில்லை.
தேர்தல் வாக்குறுதி எண் 160யில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத்திலேயே, நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என கூறினார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. 520 தேர்தல் வாக்குறுதி போல இதுவும் ஏமாற்று வேலையாக உள்ளது. வேதனை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இது தொடர்கதையாக நடைபெறுகிறது. இதற்கு எப்போது ஒரு தீர்வு காண போகிறது இந்த அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பெற்ற பிள்ளையை படிக்க வைக்க முடியவில்லை தன் உயிரை பணையம் வைத்தாவது தன் மகனின் கல்வி கட்டணத்தை செலுத்தலாமா என்று தமிழ்நாட்டில் ஒரு அவல நிலை இருக்கிறது என்று சொன்னால் நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

ஆட்சியாளர்கள் மக்களை பற்றி சிந்திக்க வேண்டாமா? மக்களின் நம்பிக்கையை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது? இந்த தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து தன் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
இந்த கல்வி கட்டணத்தை அரசு கேட்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தால், ஒரு தாய் தன் மகனின் கல்விக்காக தன் உயிரை மாய்த்து கொள்வாரா? இது எவ்வளவு பெரிய சோகமாகவும், நெஞ்சை உலுக்குகிற சம்பவமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளியாக இருப்பது வேதனையின் வேதனையாக உள்ளது.
இன்றைக்கு தன் தாயை இழந்த பிள்ளையை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. இந்த அரசு விளம்பர அரசாக உள்ளது. அமைச்சர்கள் விசாரணையில் அரசுக்கு கவனம் செலுத்த நேரம் போதவில்லை, விழா நடத்த அரசுக்கு நேரம் போதவில்லை. மாணவர்களுக்கு மடிக்கணினி தரவில்லை, எடப்பாடியார் 10 லட்சம் மாணவர்களுக்கு 2ஜி இலவச டேட்டா வழங்கினார் அதைக் கூட அரசு வழங்கவில்லை மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்யவில்லை.
இந்த தாய் நாட்டு மக்களுக்கு இன்றைக்கு எந்த உத்தரவாதம் இல்லை .ஒரு தாய் தன் உயிரை இழந்து இருக்கிறார். இதை அவ்வளவு சாதாரணமாக கடந்து போக முடியாது ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தால் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என கூறினார்.
