• Fri. Jan 24th, 2025

சென்னையில் தடையை மீறி பறந்த ட்ரோனால் பரபரப்பு

Byவிஷா

Mar 7, 2024

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ட்ரோன் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த மாதம் 29-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் சென்னை சென்ட்ரல், திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அதை சுற்றியுள்ள அண்ணாசாலை பகுதி, எல்ஐசி, ராயப்பேட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதி வழியாகவும் மர்ம ட்ரோன் ஒன்று நேற்று இரவு வட்டமிட்டது.
சிறிது நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த அந்த ட்ரோன் பின்னர், இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே வீடியோ மற்றும் படம் பிடித்தது. இறுதியில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் உள்ள பெரியார் சிலை அருகே தரையிறங்கியதாக தெரிகிறது.
இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அண்மையில் பெங்களூருவில் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மேலும் சில பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள பள்ளிகளுக்குகூட அண்மையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இப்படி, பரபரப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், தடையை மீறி ட்ரோன் பறந்தது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து விசாரிக்கிறோம்’ என்றனர். விசாரணையின் முடிவிலேயே ட்ரோனை பறக்க விட்டது யார்?என்ன காரணத்துக்காக பறக்க விடப்பட்டது என்ற உண்மையான காரணம் தெரியவரும்.