



ஜாதி, மத, மொழி ரீதியாக மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற, தேசிய சிந்தனையுடைய அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர். திமுக முதலமைச்சரின் பிணாமியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் எங்களது கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சாபம் இடுகிறார்.

தமிழகம் மற்றும் தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என்பது ஒரு சந்தர்பவாத கூட்டணி. கொள்கை முரண்பாடுடன் உள்ள கூட்டணி. எந்த ஒரு தொலைநோக்கு சிந்தனையும் இல்லாத அரைவேக்காட்டுதனமான கூட்டணி ஆகும். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி அதன் பிறகு டெல்லி, அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் ஆம்.ஆத்.மி, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகள் காணாமல் போயின. இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடுமாக உள்ளனர். மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணியில் இருந்த மம்தா அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நிற்போம் என அறிவித்திருந்தார். அந்த அளவிற்கு தேர்தலுக்கு தேர்தலில் மக்களை ஏமாற்ற ஒரு சந்தர்பவாத கூட்டணியை அமைத்து வரும் திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமிக்கும் எங்களது கூட்டணி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்த இந்தியா கூட்டணி என ஒன்று உள்ளதா? ஏதாவது பிரச்சனையில் இவர்கள் இணைந்து அரசை எதிர்த்து போராடியுள்ளனரா? ஆளும் அரசுக்கு எதிராக ஒரு விஷயத்தில் கிழக்கிலே ஒரு கட்சியும், வடக்கிலே ஒரு கட்சியும், தெற்கிலே ஒரு கட்சியும், மேற்கிலே ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் என ஒன்றோடு ஒன்று இணையாமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி கூறுவாரா?
5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த நாராயணசாமியை புதுச்சேரி திமுகவினர் கடுகளவாவது மதிக்கின்றனரா? திமுக அமைப்பாளர் சிவா அவர்கள் காங்கிரஸ் என்பது ஒரு காயிலான்கடை வண்டி, கட்ட வண்டி, ஓடாது தள்ளுவண்டி என விமர்சனம் செய்வதும், ஓடாது கட்ட வண்டி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து அவர்களை நாங்கள் ஏன் இழுத்துச்செல்ல வேண்டும் என திமுகவினர் நையாண்டி செய்ததை நாராயணசாமி மறந்துவிட்டாரா. தற்போது திமுகவையும் இணைத்துக்கொண்டு எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்ய திமுக அமைப்பாளரின் அனுமதியை நாராயணசாமி பெற்றாரா? சொந்த கட்சியான காங்கிரசில் நாராயணசாமி இருக்கும் இடம் எது? அதுவாவது அவருக்கு தெரியுமா. 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பின்னர் தேர்தலிலே நிற்காமல் ஓடி ஒளிந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்றுவரை காங்கிரஸ் கட்சியின் திருமதி.சோனியாகாந்தி, திரு.ராகுல்காந்தி அவர்களை இன்றுவரை சந்திக்க முடிந்ததா?
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழக திமுக முதலமைச்சரின் ஸ்டாலினின் கைபாவையாக மாறி திமுகவின் ஒரு கிளை கட்சியாக காங்கிரசை நாராயணசாமி மாற்றியுள்ளதை யாரும் மறக்கமாட்டார்கள். எனவே இந்த நாட்டு மக்களின் நலனுக்காக ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிரித்தாலும், மதவாத கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சரியான பாடத்தை அமைக்கும் ஒரு தேசிய சிந்தனையுள்ள கூட்டணியான அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றை குறை கூற எதிர்கட்சிகளான யாருக்கும் எந்த அருகதையும் இல்லை.
புதுச்சேரியில் தினந்தோறும் திமுகவும், காங்கிரசும் யார் தலைமையில் கூட்டணி என்பதில் வெளிப்படையாக குழாய் அடி சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர். அதை சரி செய்ய நாராயணசாமியால் முடியவில்லை. மனநல பாதிக்கப்பட்டவர் போல் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்கிறார். மாண்புமிகு எடப்பாடியார் குளத்து மீன் இல்லை. பெருங்கடலை ஆளம் திமிங்கலம் போன்றவர். அதனால் தான் ஒரு காலத்தில் பிரதமர் மோடி அவர்கள் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வீட்டிற்கு வருகை தந்தார். அது போல் தான் சர்வ வல்லமை படைத்த நம் நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வீட்டிற்கு வருகை தந்ததை நாராயணசாமி உணராமல் பேசுகிறார். நாராயணசாமிக்கு நாவடக்கம் வேண்டும்.

தமிழகத்தில் அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு இந்துமத கடவுள்களையும், இந்து மத பெண்களையும் வாய் கூசும் அளவிற்கு விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் திரு.பொன்முடி அவர்களை பதவிநீக்கம் செய்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும். அதை செய்வதை விட்டுவிட்டு அவரது கட்சி பதவியில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நீக்கம் செய்துள்ளது மக்களை ஏமாற்றும் செயலாகும். திமுகவில் கட்சி பதவியை வைத்துள்ள பலரும் இந்துமத கடவுள்களை விமர்சனம் செய்கின்றனர். அது அவர்களின் அன்றாட பணியாகும். ஒரு அமைச்சராக இருந்து கொண்டு குறிப்பிட்ட ஒரு மதத்தையும், அந்த மதத்தின் பெண்களையும் வாய் கூசும் விதத்தில் பேசுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயலாகும். எனவே தான் அமைச்சர் பதவியில் இருந்து திரு.பொன்முடி அவர்ககளை நீக்க வேண்டும் என எங்களது கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக துணைச் செயலாளர்கள் நாகமணி, காந்தி, மாநில முன்னாள் அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், |மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதிஆகியோர் உடனிருந்தனர்.

