• Sun. Jun 30th, 2024

திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

ByJeisriRam

Jun 27, 2024

மாதம் தோறும் 20000 லஞ்சம் தர வேண்டும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை மிரட்டியதுடன், ஜாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக திட்டிய திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி உட்பட மூன்று பேர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களுடன் மிரட்டுவதாக குற்றச்சாட்டு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சந்திரகலா. இவரது கணவர் பொன்னுத்துரை திமுக நிர்வாகியாக உள்ளார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலா புரத்தைச் சேர்ந்தவர் போதுராஜா (43). தூய்மை பணியாளரான இவர், ABJ அப்துல்கலாம் சிறப்பு சுய உதவி குழு என்ற குழுவின் தலைவராகவும் உள்ளார்.

இந்தக் குழுவை இவருடன் இணைந்து நடத்தி வருபவர் மற்றொரு தூய்மைப் பணியாளரான பாண்டித்துரை. இவர்கள் இருவரும் இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சியில் 2022- 2023 ம் ஆண்டுக்காக சுமார் 35 நபர்களை வைத்து தூய்மை பணி மேற்கொள்வதற்காக கடந்த 05.03.2022 அன்று ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து தூய்மைப்பணி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15.09.2023 அன்று போது ராஜா மற்றும் பாண்டித்துரை ஆகியோரை தனது அறைக்கு வரும்படி திமுக பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரகலா அழைத்துள்ளார்.

அந்த அறையில் சுகாதார ஆய்வாளர் சூரியகுமார் மற்றும் மேஸ்திரி சரவணக்குமாரி ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவி சந்திரகலா அழைப்பின் பேரில் போதுராஜா, பாண்டித்துரை மற்றும் ஞானவேல், அண்ணாமலை ஆகிய நான்கு பேர் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை எங்களுக்கு வழங்க வேண்டிய மாமூல் பணத்தை தரவில்லை.

கடந்த 2019 முதல் 2022 வரை தூய்மை பணிக்காக ஒப்பந்தம் எடுத்தவர்கள் தங்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 20000 லஞ்சமாக கொடுத்தார்கள்.நீங்களும் அதே போல் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்கு போதுராஜா மற்றும் பாண்டித்துரை ஆகியோர் மறுத்த நிலையில்,அவர்கள் இருவர் குறித்த ஜாதியை குறிப்பிட்டு, (பள்ளர் மற்றும் குறவர்) உங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒப்பந்தம் கொடுத்து பேரூராட்சியின் கௌரவமே கெட்டுவிட்டது என்று ஆபாசமாக அவர்களை திட்டியதுடன், பணம் கொடுக்கவில்லை என்றால் உங்களது ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம்,உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி மிரட்டி உள்ளனர்.

மேலும் உங்கள் இருவரையும் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு வேறு நபர்களுக்கு ஒப்பந்தம் வழங்கி அவர்களிடம் நாங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் மிரட்டி உள்ளனர்.

இதனால் அவமானமும் மன உளைச்சலும் அடைந்த போதுராஜா மற்றும் பாண்டித்துரை ஆகியோர் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேரூராட்சி மன்ற தலைவி சந்திரகலா, சுகாதார ஆய்வாளர் சூர்யகுமார், மேஸ்திரி சரவணக்குமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பேர் மீதும் கொலை மிரட்டல் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூரியகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு பணி மாறுதலாகி சென்றுவிட்ட நிலையில், சந்திரகலா ஆளுங்கட்சி பேரூராட்சி மன்ற தலைவர் என்பதாலும், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் தீவிர ஆதரவாளர் என்பதாலும் அவரை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.

இதனால் சந்திரகலா தன் மீது புகார் அளித்த போதுராஜா மற்றும் பாண்டித்துரை ஆகியோரை புகாரை வாபஸ் பெற சொல்லி மிரட்டி வருவதுடன், சாட்சிகளை கலைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *