மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மூவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்செந்தூரில் இருந்து நாமக்கல் நோக்கி TN 22 BS 8110 என்ற பதிவு எண் கொண்ட ஆல்டோ காரில் ஐந்து பேர் பயணித்துள்ளனர். இன்று இரவு சுமார் 11 மணியளவில் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் கார் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. காரில் பயணித்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நாமக்கல்லைச் சேர்ந்த மூவரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களின் விவரங்கள்:

- யுவராஜ், 50 வயது (உடல்நிலை கவலைக்கிடம் / சீரியஸ்)
- சரவணன், 42 வயது
- தேவராஜ், 47 வயது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நகரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து, மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.