• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மனித நேயத்துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..,

ByPrabhu Sekar

Jul 1, 2026

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மனிதநேயத்துடன் செயல்பட்டு, பேருந்தையே நேரடியாக அரசு மருத்துவமனைக்கு இயக்கிய சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மேற்கு தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, பேருந்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர்.

நிலையின் அவசரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், தாமதிக்காமல் பேருந்தை நேரடியாக தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இயக்கினார். பயணிகளும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

மருத்துவமனையை அடைந்ததும், பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் மயக்கமடைந்த பெண் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர் காக்கும் அந்த பொன்னான நேரத்தில், சேவையை முதன்மைப்படுத்தி மனிதநேயத்துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும், அவருக்கு துணை நின்ற பயணிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

துரிதமான முடிவும், மனிதநேயமான செயல்பாடும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவிய இந்தச் சம்பவம், அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்துள்ளது.