• Mon. Nov 4th, 2024

குண்டும் குழியுமாக காணப்படும் பிரதான சாலை

ByP.Thangapandi

Oct 23, 2024

உசிலம்பட்டி சந்தைக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படும் சூழலில், சாலையை சீரமைக்க கோரி, நுழைவு கட்டணம் செலுத்த மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி சந்தை பகுதி, பழமை வாய்ந்த இந்த சந்தை பகுதியில் தினசரி காய்கறி சந்தை, ஆடு, மாட்டு சந்தை, மலர் சந்தை, உழவர் சந்தை, வணிக வளாக கட்டிடங்கள் என ஒருங்கிணைந்த சந்தையாக உள்ளது.

மேலும் உசிலம்பட்டி அரசு நூலகம், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த சந்தை பகுதிக்கு வரும் பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படும் சூழலில் இந்த சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சாலையை சரி செய்ய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், நகராட்சி நிர்வாகத்தினரிடையே உள்ள குளறுபடியாலும், நகராட்சி பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சந்தை பகுதியை நகராட்சி வசம் ஒப்படைப்பதா, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே கைவசம் வைத்திருந்து வாடகை, வரி வசூல் செய்து கொள்வதா என்ற வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி இந்த சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்தை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது என வாய்மொழி உத்தரவாக விவசாயிகளிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற புதன்கிழமை ஆட்டு சந்தையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருவது குறித்து அறிந்த உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் நுழைவு கட்டணம் வசூல் செய்யாமல் திரும்பி சென்றனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் சிதிலமடைந்த இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *