• Mon. Jan 20th, 2025

திருப்பத்தூரில் பாஜக கொடியை எரித்த பாமக நிர்வாகி

Byவிஷா

Apr 17, 2024

திருப்பத்தூரில் பாமக நிர்வாகி ஒருவர், பாஜகவினர் மீதுள்ள அதிருப்தியால், பாஜக கொடியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரியில் வசித்து வருபவர் மதன்ராஜ். இவர் தன்னுடைய முகநூலில் 2 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் ”நான் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வசித்து வருகிறேன். நான் பாமகவில் சுமார் 12 வருட காலமாக உள்ளேன். அத்துடன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் இருந்து உள்ளேன். பாஜவிற்கு கண்டனம் தெரிவிக்க இந்த வீடியோ பதிவிட்டுள்ளேன். பாஜவினர் கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை தருவதில்லை. இது கண்டனத்திற்கு உரியது.
இந்த தொகுதியில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. பாஜவில் 2 அல்லது 3 ஓட்டுத்தான் உள்ளது. ஒரு மணிநேரத்திற்கு முன்பு நடந்த ஆலோசனையில் மரியாதை கொடுக்காமல் எங்களைத் தரக்குறைவாக பேசினர். இதேக்கூத்து தான் கிருஷ்ணகிரியிலும். அங்கு கட்சி நிர்வாகி மண்டையை உடைத்துள்ளனர். சக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு எப்படி மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுடைய முடிவுக்கு நாங்க கட்டுப்படவேண்டும் என நினைக்கிறார்கள். அது ஒரு நாளும் நடக்காது. இதன்மூலம் பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, பாஜக கொடியை எரிக்கிறேன் என்று கூறிவிட்டு, அந்த வீடியோவில், பாஜக கொடியை எரிப்பது பதிவாகியுள்ளது. இதன் பிறகும் இதே நிலை நீடித்தால் அதாவது கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் என் நடவடிக்கை வேற மாதிரி இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.