பல தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நிலையில், தற்போது ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ரூ.200 கோடிக்கும் மோசடி செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கியிடம் பேங்க் ஆப் இந்தியா வங்கி புகாரளித்துள்ளது.
என்னதான் வங்கிகள் உஷாராக இருந்தாலும், சில மோசடி நபர்கள் வங்கிகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஒடிசாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமான குப்தா பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா புகார் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் பேங்க் ஆஃப் இந்தியா அளித்துள்ள அறிக்கையில், குப்தா பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வாராக் கடன் மோசடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குப்தா பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன வழக்கில், ரூ.226.84 கோடி நிலுவைத் தொகைக்கு எதிராக, வங்கி ரூ.212.62 கோடியை ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த பின்னடைவு இருந்தபோதிலும், பேங்க் ஆஃப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் வலுவான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபமாக ரூ.2,517 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலண்டைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்த வங்கி நிகர லாபமாக ரூ.1,870 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. பேங்க் ஆஃப் இந்தியா 2024 டிசம்பர் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.19,957 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வருவாய் ரூ.16,411 கோடியாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.33 சதவீதம் குறைந்து ரூ.101.50ஆக இருந்தது.
பிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த வங்கி
