• Mon. Apr 29th, 2024

அக்:1 சர்வதேச உலக முதியோர் தினம்!..

Byவிஷா

Oct 1, 2021

இன்று அக்டோபர் 1 உலக முதியோர் தினம். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்கிற திரைப்படப்பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். இந்தப் பாடலின் வரிகள் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு உண்மை அனுபவங்களின் பிறப்பிடமாக இருப்பவர்கள் முதியவர்கள். கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் இந்த தினம் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது. உலகில் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை வருகின்ற 2030ம் ஆண்டுக்குள் 46சதவீதம் அதிகரிக்கும் என ஐ.நா.வின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற செய்தியாகும்.
அனுபவங்களின் பிறப்பிடமாகத் திகழும் முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாகத்தான் ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதியன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொதுத்தலைப்பின் கீழ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வயது மற்றும் சமத்துவத்தை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகமான எண்ணிக்கையில் முதியவர்கள் வாழ்ந்த ஆண்டு 2019 ஆகத்தான் இருக்கும் என்பது இங்கு ஒரு கூடுதல் தகவல்.
ஒரு குடும்பத்தில் மூத்தவர்கள் இருப்பது அந்தக் குடும்பத்திற்கே வெளிச்சம் போன்றது என்பதை இன்றைய இளையதலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் கல்வியறிவு, பொருளாதார வசதி போன்ற அனைத்து வசதிகளும் இருந்தாலும் கூட, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம்மை வழிநடத்த முதியவர்கள் தேவைப்படுவார்கள் என்பதே உண்மை. ஏனென்றால், அவர்களது வாழ்க்கை அனுபவங்களை எதனோடும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
அனுபவங்களின் பொக்கிஷமாகத் திகழும் முதியோர்களை வணங்கி அவர்களை அரசியல் டுடே குடும்பத்தின் சார்பாக வாழ்த்துப்பூக்களை வணங்கி மகிழ்கிறோம்.
முதியோர்களை மதிப்போம்..! கொண்டாடுவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *