• Sun. Apr 28th, 2024

வேகமா பரவுது இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்

ByA.Tamilselvan

Sep 16, 2022

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வந்ததால், இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் பரவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டது.இதை அடுத்து, தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்ஃப்ளுவென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளார்.
அதில், “திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு போன்றவை இன்ஃப்ளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால், மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *