• Sun. May 19th, 2024

ஒடுக்கப்படும் எங்களுக்கு தேர்தல் தேவையில்லை – தண்ணீர் பந்தல் கிராமம்

Byமதி

Sep 29, 2021

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திலிருக்கும் டி.பி.பாளையம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கென்று அரசோ, மாவட்ட நிருவகமோ எதுவும் செய்வதில்லை. இவர்களுக்கென தனி சுடுகாடு கூட கிடையாது. மரணிப்பவர்களின் உடல்களை தங்களின் வீட்டுப் பகுதியிலும், வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும் புதைப்பதாக கண்களில் கண்ணீர் பொங்கச் சொல்கிறார்கள்.

ஓடைப் பகுதிகளிலும் சடலங்களைப் புதைப்பதால், மழைக் காலங்களில் ஓடையில் வரும் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்நீரை பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. தங்களின் துயர நிலைக் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டபோதும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் தண்ணீர் பந்தல் கிராம மக்கள்.

இந்தநிலையில், தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் தண்ணீர் பந்தல் மக்கள். ‘‘எங்களின் அடிப்படை பிரச்னைகளைக்கூட காதுகொடுத்து கேட்க விரும்பாத இந்த ஆட்சியாளர்களை இனியும் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். எங்கள் பிணங்களிலும் அரசியல் செய்கிறார்கள்’’ என்று தங்களுடைய துயரத்தின் வலியை உணர்த்துகிறார்கள் தண்ணீர் பந்தல் கிராம மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *