• Tue. Apr 30th, 2024

லட்சங்களில் பேரம் பேசப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள்.. வெளியானது பரபரப்பு தகவல்!

By

Sep 15, 2021 ,

மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவி அனிதா உட்பட பலரும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அந்த மையத்தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவியும் தேர்வு எழுதச் சென்றிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் ராம் சிங்கும் உடந்தையாக இருந்துள்ளார். இவருக்கு நவரத்னா என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. நவரத்னா பன்சூரில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்துகிறார். அவரது நண்பர் அனில் யாதவ் இ மித்ரா என்ற பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுனில் யாதவ்வின் உறவுக்காரப் பெண்தான் தானேஸ்வரி.

இவர், ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மையத்தில் தேர்வு எழுதவிருந்தார். தானேஸ்வரிக்காகவே நீட் தேர்வு வினாத்தாள் விலை பேசப்பட்டது. தானேஸ்வரியின் மாமா பேரம் பேச ரூ.35 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனைக்கு டீல் முடிக்கப்பட்டது. தானேஸ்வரி தேர்வு எழுதிய மையத்திலிருந்து ராம்சிங் என்பவர் தான் மறைத்துவைத்திருந்த மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து வினாத்தாளை தானேஸ்வரியின் மாமாவுக்கு அனுப்பினார்.

அவரது மாமா வினாத்தாளை நீட் தேர்வு பயிற்சி மைய ஆட்களுக்கு அனுப்பி வைத்தார். பங்கஜ் யாதவ், சந்தீப் என இருவரும் சேர்ந்து தேர்வுத் தாளில் விடைகளை மார்க் செய்து அனுப்பினர். ராம்சிங்குக்கும், கல்லூரி நிர்வாகி முகேஷ் சமோடாவுக்கும் விடைத்தாளை அனுப்பினர். இதை அறிந்து கொண்ட போலீஸார் தேர்வு மையத்திலிருந்த தானேஸ்வரியிடமிருந்து விடைத்தாளையும் வினாத்தாளையும் பறிமுதல் செய்தனர். தேர்வு மையத்துக்கு வெளியிலேயே காரில் ரூ.10 லட்சம் பணத்துடன் தானேஸ்வரியின் மாமா காத்திருந்துள்ளார். இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *