• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அருகே கல்வெட்டுகள்,முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jun 24, 2022

சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் பழமையான கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள்,கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிற்கு தகல் தெரிவித்தார், அவ்விடத்தில் ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் கல்வட்ட தொல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கிலிருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப் பக்கம் இரண்டு அம்மன் கோவில்கள் காணப்படுகின்றன, அதில் ஒன்றில் புதிதான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது, கோவிலை ஒட்டி குவியலாகக் கிடைக்கும் கற்குவியலில் கல்லெழுத்து பொறிப்புடன் ஒரு கல் காணப் பெறுகிறது.


துண்டுக் கல்வெட்டு
கல்லெழுத்துப் பொறித்த இக்கல்வெட்டை வேறொரு பகுதியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இக்கல்லை நிலைக்கல்லின் மேல் பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம், இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்கப்பெற்றிருக்கிறது.
துண்டுக் கல்வெட்டு செய்தி
இக்கல்வெட்டின் எழுத்தமைதி 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம், இதில் நாயனாருக்கு,கடமை, அந்தராயம் போன்ற வரி தொடர்பான சொற்களும் குறிச்சி குளம் இசைந்த ஊரோம் போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் குறிச்சி குளம் பகுதி இறைவர்க்கு தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
குறிச்சி குளம்.
சித்தலூரை அடுத்த குறிச்சி கண்மாய் எனும் பெயரில் கண்மாய் ஒன்று உள்ளது, இக்கரையில் சிதைந்த நிலையில் துண்டு கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது, மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது, சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம், ஆனாலும் அதற்கு போதுமான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை.


கோவானூர் பகுதியில் குறிச்சி குளம்.
இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம், கோவானூரிலும் குறிச்சி குளம் எனும் பெயரில் குளம் ஒன்று இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முதுமக்கள் தாழிகள்.
முத்தலூருக்கு செல்லும் முன்னே முத்தலூர் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் வெளிப்பரப்பில் அடுத்தடுத்து காணக்கிடைக்கின்றன, அகன்ற வாய்களைக்கொண்ட தாழிகளும் அதன் அருகே புதைக்கப்பட்டுள்ள சிறுசிறு பானைகளையும் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது, அங்குமிங்குமாக 15க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன.
கல் வட்ட எச்சங்கள்.
தாழிகள் நிறைந்துள்ள பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களும் பரவலாக காணக்கிடைக்கின்றன.
பழமையான இடுகாடு.
முதுமக்கள் தாழிகள் கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது வியப்பு.
முத்தலூர், சித்தலூர்.
முற்றியது முத்தல், பழமையான முற்றிய ஊர் முத்தலூராகவும். புதிதாக உருவாகி சின்ன ஊராக இருந்ததால் சிறிய ஊர் சிற்றலூர், சித்தலூர் எனவும் வழங்கப்பட்டிருக்கலாம்.
மற்றுமொரு கல்வெட்டு
முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, இதில் பல எழுத்துக்கள் சிதைவுற்றுள்ளதால் வாசித்துப் பொருள் கொள்வதில் சிரமம் உள்ளது. வேம்பத்தூரிலிருக்கும் சமுகம் தர்மம் என தொடங்குகிறது, கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும் மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் இரவிச்சந்திரன் அவர்கள் கள ஆய்வில் தெரிவித்தார்.


எல்லைக்கல்.
இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது, இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும் அதில் நான்கு ஆரங்களும் காணப்பெறுகின்றன.
மொத்தத்தில் சித்தலூரும் முத்தலூரும் தொல்லெச்சங்கள் நிறைந்த சிற்றூராக காட்சியளிக்கிறது, இத்தொல்லெச்சங்களை இவ்வூர் மக்களிடத்தும் இளைஞர்களிடத்தும் வெளிப்படுத்தி மேலும் சிதைவுறாமல் பாதுகாக்க சிவகங்கை தொல்நடைக்குழு விரும்புகிறது என்றார்.