• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் தொடர் நெருக்கடி…சமூக வலைதளங்கள் முடக்கம்

பொருளாதார நெருக்கடி காரணமாக நிலைகுலைந்துள்ள இலங்கையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள வார ஊரடங்கை மீறி 12க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

திங்கள்கிழமை காலை வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தலைநகர் கொழும்புவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் வீட்டில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர்.

இதற்கு மத்தியில், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு சனிக்கிழமை முடக்கியது.

இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “சமூக ஊடகத் முடக்கம் தற்காலிகமானது. பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு அறிவுறுத்தல்களின் காரணமாக விதிக்கப்பட்டுள்ளது என்று நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அமைதியைப் பேணுவதற்காக நாடு மற்றும் மக்களின் நலன்களுக்காக இது அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இலங்கையில் எரிவாயு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் திட்டமிடப்பட்டது. இதை ஒடுக்கும் விதமாக சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறியதாக கிட்டத்தட்ட 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவாலாகும் நிலையில் உள்ள இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு சந்தேகத்திற்குள்ளானவர்களை விசாரணை இன்றி கைது செய்ய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.