• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சம்பள பாக்கி! ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் புகார்!

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது டான், அயலான் போன்ற படங்களிலும் அனுதீப் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனது நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் இதுவரை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். அவ்வாறு செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான்61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் அதாவது மார்ச் 31ந் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.